அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி வந்தால் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு தமிழகம் நிச்சயம் இயல்பு நிலைக்கு திரும்பும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவுபெறுகிறது. இதனையொட்டி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் முன்பை விட எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினர். அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தான் அதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், இதனால் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.
சென்னையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து பாதிப்புகள் முன்பை விட குறைந்திருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் 1196 நடமாடும் மருத்துவமனைகள் மூலமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.அதுமட்டுமின்றி சென்னையில் 25 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்
பொது மக்கள் சமூக இடைவெளியை சரிவர பின்பற்றி முகக்கவசம் அணிந்து வந்தால் நிச்சயம் தமிழ்நாடு இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பும் என கூறியுள்ளார்.
ஊரடங்கு தளர்வு குறித்து நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த விருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தெரிய வரும்.