தமிழகத்தைச் சேர்ந்தவர் டி.சிவன். இவர் தபால்காரர்ராக கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்தார். குன்னனூர் மாவட்டத்தில் உள்ள சிங்கரா மற்றும் மரப்பள்ளம் காட்டுப் பகுதிகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் அஞ்சல்களையும், ஓய்வூதியத்தையும் கொண்டுச் சேர்த்து வந்தார். இவர் குன்னூர் அருகே உள்ள ஹில்க்ரோவ் தபால் நிலையத்திலிருந்து 15 கி.மீ தூரம் நடந்தே சென்று தபால்களை கொண்டு சேர்ப்பார். இவரது பயணத்தின் போது தினமும் பல்வேறு சவால்களை எதிர் கொண்டிருக்கிறார். அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால் யானைகள், கரடிகள் போன்ற விலங்குகளை எதிர்கொள்ள நேரிடும். அவை அனைத்தையும் சமாளிப்பது என்பது சாதாரன காரியம் அன்று. இருப்பினும், அவர் தனது கடமையைச் செய்வதிலிருந்து ஒரு போதும் பின்வாங்கவில்லை.
இந்நிலையில், இவர் கடந்த வாரம் ஒய்வு பெற்றதை குறிப்பிட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது வலைதளப்பக்கத்தில் அவரது புகைப்படம் மற்றும் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் “தபால்காரர் டி. சிவன் குன்னூரில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளுக்கு அஞ்சல் அனுப்ப தினமும் 15 கி.மீ தூரம் நடந்து செல்வார். காட்டு யானைகள், கரடிகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் வழுக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளை கடந்து சென்று தனது பணியை திறம்பட செய்து வந்தார். 30 ஆண்டுகளாக மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது கடமையைச் செய்து வந்த அவர் கடந்த வாரம் ஒய்வு பெற்றிருக்கிறார்” என்று பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்த 30 ஆண்டுகால அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அதில் ‘இவர்தான் இந்தியாவின் உண்மையான ஹீரோ’, ‘அவரின் இந்த அர்ப்பணிப்பிற்கு மனமார்ந்த பாராட்டுகள்’, ‘இது போன்ற மக்களின் அர்ப்பணிப்பு தாழ்த்தப்பட்டோரை உயர்த்த உதவும்’ போன்ற கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.