சென்னை., தமிழகத்தின் தலைநகர், வந்தாரை வாழ வைக்கும் ஊர்., சட்டப்பேரவை செயல்படும் இடம்., நடிகர்கள் வாழும் கூடாரம், இதெல்லாம் நாம் அறிந்ததே…
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ரயில்நிலையம் பேருந்துநிலையம் சென்று பார்த்தோமானால் அங்கு சில இளைஞர்கள் கையில் ஒரு பை., தோள்பட்டையில் ஒரு காலேஜ் பையோடு சென்னைக்கு பயணத்தை மேற்கொள்ள தயாராக இருப்பார்கள். அவர்களது பையை கொஞ்சம் அலசி பார்த்தால் தோள்பட்டையில் உள்ள பையில் சில சான்றிதழ்களும் புதிதாக எடுக்கப்பட்ட ரெஸ்யூம்களும், கையில் உள்ள பையில் நல்லா அயர்ன் பண்ண ஒரு பார்மல் சர்ட் பேண்ட் கவரில் ஷூக்களும் இருக்கும். அது சென்னைக்கான பயணம் இல்லை அவர்களின் வாழ்க்கைக்கான பயணம்.
பலரின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் சென்னைதான். ஓடும் கூவம் ஆறு, எங்கு பார்த்தாலும் டிராபிக், ரோட்டோர கடை, கூட்ட நெரிசலோடான பேருந்து இது அனைத்தையும் கடந்துவந்தவர்கள்தான் இன்று பென்ஸ் காரிலும், டுக்காட்டி பைக்கிலும் பயணம் செய்கிறார்கள்.
பணம் உள்ளவர்களுக்கு லீலா பேலஸ், குறைந்த பணம் இருப்பவர்களுக்கு ரோட்டோர கடை, சொர்ப்ப பணம் இருப்பவர்களுக்கு பானி பூரி கடை என அனைவருக்கும் பாரபட்சமின்றி சாப்பாடு கிடைக்கும்.
சென்னையில் நாம் அதிகம் கேட்கும் வார்த்தை நீ எங்க வேலை பாக்குற, எந்த ஊரு என்பதுதான். 350 கிலோ மீட்டர் தொலைவில் நமது ஊர் இருந்தாலும் சென்னையில் சொந்த ஊர்காரர்களை பார்க்கும் போது நமக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமையானால் நடக்க நடக்க தூரம் குறையாத மெரினா கடற்கரை, கண்ணை கவரும் பெசன்ட் நகர் பீச், இரண்டு பக்கம் காது குளிர கடலோசை கேட்கும் ராயபுரம் என்4 கரை என நேரத்தை மனதுக்கு இதமாக போக்கலாம். சரி., வெயில் அதிகமா இருக்கு அப்டினா கொஞ்சம் ஏசி காத்து வாங்க ஒவ்வொரு ஏரியாக்கும் ஒரு ஷாப்பிங் மால், 75 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை டிக்கெட் கிடைக்கும் தியேட்டர்கள்.
சென்னை., நூற்றில் 80 பேரை வாழ வைத்து அழகு பார்த்தாலும் அதில் 20 பேரை மீண்டும் ஊருக்கே அனுப்புகிறது. அவங்களும் தங்களது கண்ணீரை மெரினா கடலில் உப்போடு உப்பாக கரைத்து விட்டு வருவார்கள். அலை கூறும் ஆறுதல் நம்மை பல மடங்கு ஊக்குவிக்கச் செய்யும்., உன்னை திரும்ப அனுப்பவில்லை அடுத்த நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கச் செய்கிறேன் என சென்னையே கடலின் அலை மூலமாக தெரிவிப்பது போல் இருக்கும்.
குருவிக்கூடு போல் வளர்ந்து வரும் அப்பார்ட்மென்ட். வடபழனி, டிநகரில் ஆங்காங்க கண்ணுக்கு தெரியும் மேன்சென்கள். அலுவலக விடுமுறை தினத்தில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கும் சொந்த ஊருக்கு போகும் ஆசையோடு துள்ளி குதித்து ஓடும் நபர்கள் என பல பேராசைகள் சென்னையில் புதைந்திருக்கிறது.
சென்னையில் உள்ள பெரும்பானவர்களுக்கு உடல் சொந்த ஊராகவும் உயிர் சென்னையாகவும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இன்றும் வட மாநிலங்களுக்கு சென்றோமானால் இந்தி பேசும் வயதானவர்கள் நம்மை மதராஸி என்றுதான் கூறுவார்கள். நம்மை மட்டுமில்ல கேரளா, ஆந்திரா, தெலுங்கானா என அனைத்து தென் மாநில மக்களும் அவர்களை பொருத்தவரையில் மதராஸிதான்