உதயநிதி Vs கனிமொழி; திமுக உள் விவகாரத்தை கிழித்து தொங்க போட்ட அமைச்சர் காமராஜ்!
திமுக எம்.பி. கனிமொழி விரக்தியில் பேசி வருகிறார் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு கனிமொழிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு, திமுக மக்களவை குழு தலைவராக அவர் அறிவிக்கப்படுவார் என்று பேசப்பட்டது. ஆனால், கடும் போட்டிக்கு பிறகு அந்த பொறுப்பு டி.ஆர்.பாலுவிற்கு வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக, கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி அல்லது ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று காத்திருந்த கனிமொழிக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. இதனிடையே, கட்சிக்குள் அசுர வேகத்தில் வளர்ந்த உதயநிதி, கனிமொழி போகும் அதே ரூட்டில் குறுக்கே வந்தார். ஏற்கனவே, கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ள கனிமொழியை, இது மேலும் சீண்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.
டெல்லியில் ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டபோது, டெல்லியில் இருந்த கனிமொழி, திமுக சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து, அடுத்த சில நாட்களிலேயே சென்னையில் இருந்து டெல்லி பறந்த உதயநிதி, மாணவர்களை சந்தித்து, போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
சாத்தான்குளம் விவகாரத்திலும், தூத்துக்குடி தொகுதி எம்.பி. என்ற அடிப்படையில் கனிமொழி நேரில் சென்று சிறப்பாக பணியாற்றினார். இதைத்தொடர்ந்து, உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பிய உதயநிதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும், கனிமொழி மற்றும் உதயநிதி இடையே கசப்பான உறவை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், இதுவரை திமுக கட்சிக்குள் மட்டும் பேசப்பட்டு வந்த கனிமொழி, உதயநிதி விவகாரம் குறித்து தற்போது அமைச்சர் காமராஜ் விளாசியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ்,” திமுகவில் அதிகார போட்டி நடைபெற்று வருகிறது. எம்.பி. கனிமொழியைவிடவும், அதிக அதிகாரம் படைத்தவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். இதனால், விரக்தியில் இருக்கும் கனிமொழி, அதிமுக குறித்து தவறாக பேசிவருகிறாா். அமித்ஷாவின் கையில் அதிமுக இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், அதிமுக என்றென்றும் தனித்தன்மையுடன் இருக்கும்.
2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் வகையில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். இதன் காரணமாகவே நாள்தோறும் மக்கள் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்”, என்று கூறினார்.