தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் இதுவரையில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி மருத்துவ நிபுணர் குழுக்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து அண்மையில் மற்ற நாட்களில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து வெளியே சுற்றும் பொதுமக்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். மேலும் முழு ஊரடங்கு நாட்களில் போலீஸார் தீவிர கண்கானிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மெரினா சாலையில் உள்ள நேப்பியார் பாளத்தில் நாய் ஒன்று போலீஸாருக்கு உதவும் வகையில் திறம்பட செயல்பட்டு வருகிறது. அதாவது காவல் துறையினரின் வாகனங்கள் அல்லது ஊர்திகள் சென்றால் அமைதியாக நின்று வேடிக்கை பார்க்கிறது. இதே பொதுமக்கள் நடமாட்டம் தென்பட்டால் துள்ளிக் குதித்து அவர்களை விரட்டி அடிக்க முயல்கிறது. நாயின் இந்த மறைமுக சேவை காவல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசும், காவல் துறையினரும் போராடி வரும் நிலையில் நாயின் இந்த செயல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.