பிரபல கன்னட நடிகையான விஜயலட்சுமி, சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனார். இதைத்தொடர்ந்து, ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர் நடித்தார்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து புகார் எழுப்பி வந்தார். சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பல வீடியோக்களையும் அவர் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அந்த வகையில், நடிகை விஜயலட்சுமி நேற்று தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், இது என்னுடைய கடைசி வீடியோ. இன்னும் சில மணிநேரங்களில் நான் உயிருடன் இருக்க மாட்டேன். என் குடும்பத்தை விட்டுவிட்டு போகிறேன். சீமான் முன் ஜாமீன் எடுக்கவோ, தப்பிக்கவோ விட்டு விடாதீர்கள். நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் வாழ விடாமல் செய்துவிட்டனர். பனங்காட்டுப் படை கட்சியை சேர்ந்த ஹரி நாடார் செய்ததும் பெரிய தப்பு. தாங்கள் செய்த தப்பை அவர்கள் இருவரும் உணர வேண்டும். இரண்டு பேரையும் கைது செய்ய அரசுக்கு ரசிகர்கள் அழுத்தம் தர வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, விஜயலட்சுமி சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் பிபி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில், நடிகை விஜயலட்சுமிக்கு நீதி கேட்டு ரசிகர்கள் அதிகளவில் டுவீட் செய்து வருகின்றனர். இதனால் #vijayalakshmi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.