திமுகவின் இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதி மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், தனது ஆளுமையை நிரூபிக்க திமுக தலைவர் ஸ்டாலின் மெனக்கெட்டு வருகிறார். இதற்காக 2014ம் ஆண்டு மோடியை வெற்றி பெற செய்த ஐ-பேக் நிறுவனத்துடன் மோடி கூட்டணியை வீழ்த்த ஒப்பந்தம் போட்டுள்ளார்.
ஐ-பேக் நிறுவனத்தின் பிரஷாந்த் கிஷோர் கொடுத்த அறிவுரைபடி விக் வைத்துக் கொண்டார். ஜூம் காலில் மீட்டிங் போட்டு கழக உடன்பிறப்புகளை அலர்ட்டாக வைத்துள்ளார். அவ்வபோது சைக்கிளுடன் போட்டோ எடுத்து பப்ளிசிட்டி செய்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, ஐ-பேக் நிறுவனத்தின் மற்றோரு பரிந்துரையை ஸ்டாலின் அண்மையில் செயல்படுத்தி உள்ளார். கட்சியில் இளம் உறுப்பினர்கள் குறைவாக இருப்பதாகவும், அவர்களை கவர இணையவழி உறுப்பினர் சேர்க்கை தொடங்க ஐ-பேக் நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது.
இதன் அடிப்படையில், கடந்த 15ம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற புதிய திட்டத்தை ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, இணையதளத்தில் செல்போன் எண்ணை தந்து ஓடிபி மூலமாக , 18 வயதை நிறைவு செய்திருக்கும் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை எளிதாக்கப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர். முதல் மூன்று நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்ததாக ஸ்டாலின் மார்தட்டி கொண்டார். இந்த எண்ணிக்கை 10 நாட்களில் தற்போது 4.50 லட்சத்தை தாண்டியுள்ளது.
அதேசமயம், முதல் நாளில் இருந்தே சர்ச்சைகளும் வெடிக்க தொடங்கிவிட்டன. வெறும் செல்போன் எண் மூலம் உறுப்பினராகலாம் என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏன் நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியையும் கூட சிலர் கட்சி உறுப்பினராக்கி உள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கான உறுப்பினர் அட்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அதிகாரப்பூர்வமானது என்ற வகையில் சில தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து திமுக சார்பில் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்று.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சந்தி சிரிக்க வைத்திருக்கும் சூழலில், அதிமுக அமைச்சர்களும் இந்த விவகாரத்தை லேசில் விடுவதாக தெரியவில்லை. திமுக ஆன்லைன் இயக்கமாக மாறிவிட்டகாக அமைச்சர் செல்லூர் ராஜூ விளாசி இருக்கிறார். திமுக உறுப்பினர் சேர்க்கையில் டிரம்ப்பை சேர்த்தது நியாயமா என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேலி செய்துள்ளார். இதனால், திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை குறித்து கட்சியின் உடன்பிறப்புகளுக்கே சந்தேகம் எழுந்திருப்பது வெற்றிகரமான தோல்வியையே காட்டுகிறது.