தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம் அது ஒரு வார்டோ அல்லது தொகுதி நிறைவு பெறுகிறது என்பதை குறிக்கும்.
நீண்ட நாட்கள் பார்க்காமல் இருந்த எம்எல்ஏக்கள் தங்களது வீடு தேடி வருவார்கள். அவர்களோடு செல்பி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த எப்போது அவர்களை பார்க்க நேரும் என்பது தெரியாது.

எத்தனை வோட்டுமா உங்க வீட்டுல இருக்குனு கட்சியினர் கணக்கெடுத்து பணம் கொடுக்கக் கூட நேரலாம். ஆனால் வோட்டுக்கு காசு வாங்குபவர்களை மிகமிக கேவலமாக அதே கட்சி தலைவர்களே திட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் இருக்கிறது. வாக்குக்கு காசு வாங்குவது என்பது அவர்களிடம் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் அடகு வைப்பதற்கு சமம். தங்கம் என்ற உலோகத்தையே கடையில் அடகு வைக்க அவ்வளவு சிந்திப்போம், நமது குடும்பத்தை வாக்கு என்ற பெயரில் காசு வாங்கி அடகு வைப்பதற்கு முன்பாக சற்று சிந்திப்பது நல்லது.
மறுபுறம் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை அறிவிப்பார்கள். சில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை படிக்கும் போது நமக்கு புல்லரிக்கும். காரணம் நமது வாழ்நாள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமான சலுகைகள் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அது தேர்தல் அறிக்கைதான் அரசு அறிவிப்பு அல்ல. எனவே தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருப்பது எத்தனை நிஜமாகும் என்பது கேள்விக்குறியே. சற்று சிந்தித்து வாக்களியுங்கள்.
அலுவலகத்திற்கு வழக்கமாக செல்லும் நேரத்தைவிட சற்று முன்பாகவே செல்வது நல்லது. காரணம் எங்கு எந்த கட்சி பிரசாரக்கூட்டம் நடைபெறுகிறது என தெரியாது. அந்த கூட்டத்தினால் சாலை தடுப்பு ஏற்பட்டு மாற்றுவழியில் செல்ல நேரிடும். அலுவலகத்திற்கு செல்வதில் சற்று தாமதம் ஏற்படலாம்.
சேலை, டிபன்பாக்ஸ், பாத்திரம், பிளாஸ்டிக் பொருட்கள், பணம் போன்ற பல்வேறு பரிசுப் பொருட்கள் இலவசமாக வாங்க நேரிடலாம். இதுபோன்று பரிசுப் பொருட்களை வழங்க அவர்கள் உங்களுக்கு சொந்தமும் இல்லை, அன்று உங்களுக்கு பிறந்தநாளோ திருமணநாளோ இல்லை. பரிசுப் பொருட்கள் யாருடைய காசு என்பதையும் கொடுக்கும் பரிசுப் பொருட்களுக்கான பணம் தங்களிடமே வரியாக வசூலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் என்றால் வாக்குகளை சேகரிக்க சாதி மற்றும் இனம் உணர்வுகளை தூண்டக் கூடாது கோயில், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற இடங்களில் பிரசாரம் செய்யக் கூடாது. கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூடாது. தனிநபரை தாக்கி பேசக்கூடாது. அங்கிகரிக்கப்பட்ட மற்றும் அனுமதி பெற்ற சுவற்றை தவிர பிற இடங்களில் விளம்பரப்படம் வரையக்கூடாது. கேள்வி எழுப்புதல் கூடாது ஒருகட்சி போஸ்டரை பிற கட்சியினர் அகற்றக் கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளது.
இதையெல்லாம் மீறும் நபர்கள் குறித்து தங்களுக்கு புகார் கொடுக்க நேரமில்லை என்றாலும் இவர்களுக்கு உடந்தையாக இல்லாமல் நேர்மையாக வாக்களித்து உண்மையான ஜனநாயகத்தை உருவாக்குவோம்.