நடிகர் வடிவேலு பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. இந்த தேர்தலில் எப்படியாவது நோட்டாவை தாண்டிவிட வேண்டும் என்பதோடு ஒரு வேட்பாளரையாவது சட்டப்பேரவைக்குள் அனுப்பிவிட வேண்டும் என பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. காரணம் அனைவரும் அறிந்ததே, தமிழகத்தில் முதன்முறையாக ஆகச்சிறந்த ஆளுமைகளான திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர்கள் ஜெயலலிதா இன்றி நடைபெற இருக்கும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பாஜக தடம் பதித்தாலும் தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் தங்களது வெற்றிக் கொடியை நிலைநாட்டுவது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தடம்பதிக்க இந்த முறை பாஜக ஏணைய நடவடிக்கை எடுத்து வருகிறது. வருகிற தேர்தலின் போது பிரச்சார பீரங்கியாக பயன்படுத்த கட்சியில் நட்சத்திர பட்டாளத்தை இணைந்து வருகிறது பாஜக.
அதன்படி கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கவுதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், எஸ்.வி சேகர், பவர் ஸ்டார், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த லிஸ்டில் அடுத்ததாக வடிவேலு இணைய இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
ஆனால், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். மேலும், கடந்த 2011 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.