நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஜீவித் குமார், தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக தேர்வை தவறவிட்ட மாணவா்களுக்கு சிறப்பு தேர்வு கடந்த புதன்கிழமை நடந்தது. இந்தநிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 15,97,435 பேரில் 13,66,945 பேர் தேர்வு எழுதினர். அதில் 7,71,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 56.55%ஆக உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 17,101 தமிழ் தேர்வர்கள் உட்பட 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 99,610 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 48.57%ஆக இருந்த நிலையில், நடப்பாண்டு 57.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஜீவித் குமார், தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி தட்சிணாமூர்த்தி மற்றும் மகேஸ்வரி தம்பதியின் மகன்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த இவர், இரண்டாவது முயற்சியில் தேர்வில் வெற்றி பெற்று, தேசிய தேசிய அளவில் 8வது இடத்தில் உள்ளார்.
தேசிய அளவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சோயிப் அஃப்தாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். டெல்லியை சேர்ந்த மாணவி அகாங்ஷா 720க்கு 720 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தேர்வு முடிவுகள் அறிய: http://ntaresults.nic.in/neet20/result/resultneet.htm