ஆண்கள் 2.5 வருடம், பெண்கள் 2.5 வருடம்: சமமான ஆட்சிக்கு ஓ.பி.எஸ். ஆதரவு!
5 ஆண்டுகால ஆட்சியில் ஆண்கள் இரண்டரை ஆண்டுகளும், பெண்கள் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி புரிய வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது குறித்த கருத்தரங்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய துணை முதலமைச்சர்,” பெண்களுக்காக தமிழக அரசு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறைகளை முற்றிலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்களை அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்களால்தான், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது .பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து அரசு செயல்படும்.
அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி புரிய வேண்டும். ஆணும், பெண்ணும் ஏன் சமமாக ஆட்சி செய்யக்கூடாது? ஆணுக்கு பெண் சமம் என்பது உருவாகினால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும்.
இந்த கருத்தரங்கில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை செயல்படுத்த முதலமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.