சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜகவை தொடர்ந்து காங்கிரஸும் எம்ஜிஆரை கையில் எடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் மிக முக்கிய அஸ்திரங்களில் ஒன்று மற்ற கட்சிகள் மறந்த, ஒதுக்கிய தலைவர்களை தனதாக்கி கொள்வது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனுபவம், பெரிய வரலாறு, அனைத்து மாநில மக்களையும் கவரும் ஆளுமை மிக்க தலைவர் இல்லாத பாஜகவிற்கு இந்த யுக்தி பெரிதும் கை கொடுத்தது.
அந்த வகையில், சர்தார் படேல், சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், பகத் சிங், காமராஜர் ஆகியோரை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாஜக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த வரிசையில் அண்மையில் எம்ஜிஆரும் இணைக்கப்பட்டுள்ளார்.
வெற்றிவேல் யாத்திரைக்கான வீடியோவில் எம்ஜிஆர் புகைப்படத்தை பாஜக பயன்படுத்தியது. அதில், “பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமோடா” என்ற வரிகள் ஒலிக்க, பாஜக கொடியுடன் எம்ஜிஆர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கூட்டணி கட்சியாக இருந்தாலும், இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அண்மை காலமாக அனைத்து மாநிலங்களிலும் கரைந்து வரும் காங்கிரஸும் பாஜகவின் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. பாஜகவை தொடர்ந்து காங்கிரஸும் எம்ஜிஆரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியுள்ளது.
போஸ்டர் கலாச்சாரம் கொஞ்சம் அதிகமாக உள்ள மதுரையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில், அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்குச் செங்கோல் வழங்குவது போன்ற படம் உள்ளது. மேலும், எங்கள் வாத்தியாரே என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. தற்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், இந்த போஸ்டர் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறைவாசத்திற்கு பிறகு, அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. இதனால், பெரும்பாலான அதிமுக கட்சி போஸ்டர்களில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படம் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. எம்ஜிஆரின் புகைப்படங்கள் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து வருகிறது .
அதிமுகவில் தற்போது எம்ஜிஆர் காலத்து தலைவர்கள், விரல் விட்டு எண்ணும் அளவிற்கு சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். இதனால், இரட்டை தலைமையின் கீழ் எம்ஜிஆர் மறக்கப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பாஜகவும், காங்கிரஸும் அவரை உரிமை கொண்டாட முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.