திமுகவில் இருந்து நீக்கப்பட்டத்திற்கு எதிராக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2021 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றன. ஒரு புறம் சட்டமன்றத்திற்கு கணிசமான உறுப்பினர்களை அனுப்பி அழகு பார்க்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு புறம், திமுகவோ ஆட்சியை கைப்பற்றுவதோடு மட்டுமில்லாமல், கட்சியிலும் ஸ்டாலின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தை அதிகரிக்க போராடி வருகிறது.
ஸ்டாலினை பின்பற்றி உதயநிதி கட்சி தலைமை பொறுப்பை அலங்கரிக்கும் வகையில், அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் வந்ததில் இருந்தே பல முக்கிய முடிவுகளில் உதயநிதியின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவுக்கு பிறகு காலியான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு பதில், உதயநிதியின் பேராதரவு பெற்ற சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசுக்கு வழங்கப்பட்டது.
இதனால், அதிருப்தியில் இருந்து கு.க.செல்வம் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிப்ட் அமைக்க வேண்டும் என்று கேட்டதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க டெல்லி வந்தேன். அப்போது ஜே.பி.நட்டாவை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே அவரை சந்தித்தேன்”, என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கு.க.செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனை எதிர்த்து கு.க.செல்வம் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் ,“கட்சி விதிகளின்படி, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தலைவருக்கு இல்லை. எந்த விசாரணையும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கு குறித்து திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கை செப்டம்பர் 18ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.