ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் இல்லை, நாட்டிற்கான உடனடி தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால், இந்தியாவில் எப்போதும் ஏதோ ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல், மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் என இந்தியாவில் எப்போதுமே தொடர்ச்சியாக தேர்தல் திருவிழாதான்.
இதனால், தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அந்தந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகள் தடைப்பட்டு போகிறது. இதன் காரணமாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாகவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற யோசனையை வலியுறுத்தி வருகிறது. அதாவது, நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவை தேர்தலையும் நடத்தலாம் என கூறி வருகிறது.
இந்தநிலையில், இந்த யோசனை பற்றி பிரதமர் நரேந்திர மோடி, தற்போது மீண்டும் பேசியிருக்கிறார். அரசியலமைப்பு சாசன தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை சபாநாயகர்களின் மாநாடு குஜராத் மாநிலம் கேவாடியாவில் நடைபெற்றது.
இதில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி,” நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடப்பது, வளர்ச்சிப் பணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகிறது.இதனால்,செலவும் அதிகரிக்கிறது.
எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் இல்லை, நாட்டிற்கான தேவை. மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கு ஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த வேண்டியது அவசியம்.
அதாவது, மாநில சட்டப்பேரவை தேர்தல்களும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்”, என்று தெரிவித்தார்.