ஒரு காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன, அதில் எவ்வாறு வியாபாரம் செய்வது என்று அறியாமல் இருந்து சிறு குறு தொழிலாளர்கள் கூட சூழலுக்கு ஏற்ப மாறி வருகின்றனர். இந்த கொரோனா நோய்த் தொற்று பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பாதித்திருக்கிறது. தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் வெளியே செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற விஷயங்களுக்காக வெளியில் செல்வதை பெரும்பாலோனார் தவிர்த்து வருகின்றனர். இந்த அசாதாரண சூழலால் பல்வேறு சிறு தொழில்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் துணிகளுக்கு பெயர் போன திருப்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் சூடு பிடித்திருக்கிறது. அங்குள்ள வியாபாரிகள் தற்போதைய தேவைக்கு ஏற்றவாறு ஆடைகளுக்கு ஏற்ப முகக் கவசங்களை தைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் இருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு நேரடியாக ஆடைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த கொரோனா தொற்று அனைத்தையும் முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறது.
நுகர்வோர்கள் தற்போது அதிகளவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வருகின்றனர். ஆடைகள் கொரியர் மூலம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பப்படுகிறது. குறைந்த நாட்களில் நுகர்வோரை சென்றடையும் கொரியர் தற்போது சிறிது தாமதமாகியுள்ளது. இருப்பினும் கடைக்குச் சென்று வாங்குவதை விட தற்போதைய சூழலில் ஆன்லைன் மூலம் வாங்குவதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
இந்த தோற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் வரை நேரடி வர்த்தகம் என்பது பெரிதளவில் சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.