பல மொழிகள், மதங்கள், மாநிலங்களின் கூட்டமைப்பே இந்தியா. மதங்களின் அடிப்படையில் கடவுள் வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மொழி தோன்றிய காலத்தில் கடவுள் குறித்த தொன்மையான கதைகள் தோன்றி விட்டன. காலப்போக்கில் கடவுள் உண்டு என்ற கூட்டத்தில் இருந்தே இல்லை என்ற குரலும் எழத் தொடங்கியது.
கடவுள் கொள்கையை பாரம்பரியமாக பின்பற்றும் இந்து மதத்தில் பிறந்து மனித சமூகத்தில் இருக்கும் பாகுபாடை கண்டு நாத்திகவாதியாக உருவெடுத்தவர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எனும் பெரியார். பெரியார் என்ற ஒற்றைச் சொல் இன்றும் சுயமரியாதை என்ற வார்த்தைக்கு விளக்கமாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
சாதிய அடிப்படையிலான அனைத்து சமூக வேறுபாடுகளையும் கண்டுத்து கொந்தளித்து விமர்சித்து எதிர்த்தவர் பெரியார். தனது பெயருக்கு பின்னாள் இருந்த சாதிப் பெயரை தூக்கி எறிந்து, பின்னாளில் அவரை பின்பற்றுபவரும் சாதி பெயரை தூக்கி எறியச் செய்வதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். இன்றளவும் பிற சில மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மட்டும்தான் மனிதர்கள் தங்களது பெயரை மட்டும் குறிப்பிடுகிறார்கள். பிற மாநிலங்களில் தங்களது பெயருக்கு பின்னாள் சாதிப் பெயரோ, குடும்பப் பெயரோ பெரும்பாலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தின் பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என குரல் கொடுத்தவர் பெரியார். நீதிக்கட்சி மூலம் இடஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் கோயிலுக்கு நுழைவது போன்ற அனைத்தையும் சாத்தியமாக்கினார். முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போர் தமிழகத்தில் நடத்திக் காட்டினார். இந்த போராட்டத்தில்தான் 13 வயது சிறுவனாக கருணாநிதி கலந்து கொண்டார்.
நான் செய்வதையெல்லாம் செய்ய தனக்கு அருகதை இருக்கா என தெரியவில்லை ஆனால் இதை செய்வதற்கு யாரும் அருகதையோடு முன்வர வில்லை எனவே நான் செய்வேன். யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் செய்யாதே போன்ற பொன்மொழிகளை கூறிய பெரியார் பிறந்ததினம் இன்று.