சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விடுதலையாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்ற 3 பேருக்கும் 10 கோடி ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதில், ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, நன்னடத்தை விதிகளின் படி, சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக, 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் விட்டதை பிடிப்பார் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டுவார் எனவும் பேசப்பட்டது.
இந்தநிலையில், சசிகலா விடுதலை குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி ஆர்.டி.ஐ. மனு தாக்கல் செய்தார். இதற்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.
அதில், “சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார். அதேசமயம் 10 கோடி ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் சசிகலா 2022ம் ஆண்டும் பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலை செய்யப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.சசிகலாவின் விடுதலையால் தமிழக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையிலான பனிப்போரால் திக்குமுக்காடி உள்ள அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழும் என கூறப்படுகிறது. அதிகமுகவில் சசிகலா ஆதரவாளர்கள் இருப்பதாகவும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுகவும், அமமுகவும் இணையும் எனவும் சொல்லப்படுகிறது.