தமிழகத்தில் ஆகஸ்ட் 31 முதல் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில் நேற்றைய முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஊரங்கு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தார். முக்கிய தளர்வுகள் அறிவிப்பாக மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து இயக்கப்படும் எனவும் கோவில்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதையடுத்து போக்குவரத்து எப்படி செயல்படும், அரசு, தனியார் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்கான நடைமுறைகள் என்ன, பயணச்சீட்டு விலை என்னவாக இருக்கும் உட்பட பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே இருந்தது.
இதை தெளிவுப்படுத்தும் வகையில் செய்தியாளர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறிய செயல்முறை குறித்து பார்க்கலாம்.
அரசு பேருந்துகள் மாவட்ட எல்லைகள் வரை பேருந்து நிறுத்தம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் பிற மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாவட்ட எல்லையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தார். அதுமட்டுமின்றி பேருந்து இரவு 9 மணிவரை இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அறிகுறி தென்படும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் படிபடியாக பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் கூறினார்.
அதேபோல் அரசு பேருந்துகளில் பயணச்சீட்டு விலை உயர்த்தப்படாது எனவும் அவர் உறுதி அளித்தார். மாதாந்திர பாஸ் அரசு பேருந்துக்கென வைத்திருப்பவர்களுக்கு அது செப்டம்பர் 15 ஆம் தேதி செல்லுபடியாகும் எனவும் அவர் அறிவித்தார்.