சீனாவின் வுகான் நாட்டில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலகெங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் முடங்கி வீட்டுக்குள்ளேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. 21 நாட்கள் என்று தொடங்கிய ஊரடங்கு 210 நாட்களாகியும் முடியாத நிலை ஏற்பட்டது.
பொது போக்குவரத்தில் தொடங்கி கோயில்கள், ஷாப்பிங் மால், தியேட்டர்கள் முதல் சிறு வணிகங்கள் வரை மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என காலக்கட்டத்தை பிரிக்கும் அளவிற்கு இதன் தாக்கம் எதிரொலித்தது.
அரசு அறிவித்த பொது முடக்கம் பாரபட்சமின்றி ஏழை முதல் பணம்படைத்தவர்களை முடங்க வைத்தது என்றால் அது மிகையல்ல. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மக்கள் தங்களது கஷ்டங்களை முறையிடுவதற்கு கடவுளைக் கூட காணச்செய்யாமல் கோயில்களும் மூடப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் பல்வேறு பெருவிழாக்கள் நடத்துவதற்கு தடைவிதிகக்கப்பட்டது. அப்போது பாஜக-விற்கும் அதிமுகவிற்கும் மோதல் தொடங்க ஆரம்பித்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி வேண்டும் என பாஜகவும், முடியவே முடியாது என அதிமுகவும் முரண்டு பிடித்தது.
இதனால் பாஜக அதிமுகவிற்கு இடையே வார்த்தை போர் மூண்டது. அரசு அறிவித்த பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31 முதல் நிறைவு பெற உள்ள நிலையில், செப்டம்பர் 1 முதல் இபாஸ் ரத்து, கோவில்கள் திறக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார்.
கொரோனாவை காரணம்காட்டி எதிர்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டு, திருவிழாக்களுக்கு அனுமதி தரவில்லை என கூட்டணி கட்சி முன்வைத்த குற்றச்சாட்டு என அனைத்துக்கும் முடிவு கட்டும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு இருந்தது.
அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கலாம், வழிபாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். தினசரி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்திற்கு உள்ளான பொது மற்றும் தனியார் போக்குவரத்து தொடங்கப்படும். சென்னை மெட்ரோ செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும். தமிழகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க இ-பாஸ் ரத்து செய்யப்படும் எனவும் வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள் ஷோரூம்கள் பெரிய கடைகள் செயல்பட அனுமதி இருப்பினும் வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்கள் இயங்குவதற்கு தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
தவிர்க்க இயலாத பணிகளை தவிர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிபாட்டு நடைமுறைகளை பின்பற்ற இயங்க அனுமதி
உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு பயிற்சு பூங்காக்கள் செயல்பட அனுமதி விளையாட்டு மைதானங்கள் இயங்க அனுமதி இருப்பினும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
அரசின் இந்த அறிவிப்பு வீட்டில் முடங்கி கிடந்த பலதரப்பினரையும் ஊக்கமளித்து செயல்பட வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறைந்த வரும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு தவறாகும் பட்சத்தில் மீண்டும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிவிட்டால் ஆளும் அதிமுக அரசுக்கு இது பேரிடியாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.