மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் செப்டம்பர் 15ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
Read More 7.5% quota for government school students News
இதையடுத்து, இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையிலும், 7.5% உள்ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார்.
இதற்கிடையே, உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகே மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதேசமயம், திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த ஆளுநர், மசோதா குறித்து முடிவு எடுக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை என்று கூறினார்.
ஏற்கனவே, கொரோனா தொற்று காரணமாக, மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு பல மாதங்கள் தள்ளிப் போகியுள்ளது. உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் செயலால் மாணவர் சேர்க்கை மேலும் தாமதமாகும் சூழல் உருவானது.
இதனால், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 162 பிரிவு கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த அரசாணை செல்லுமா, செல்லாதா என விவாதம் எழுந்துள்ளது.
திமுக ஆட்சியில் நடந்தது என்ன?
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் 50% உள்ஒதுக்கீடு வழங்க திமுக ஆட்சியில் கடந்த 1999ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நிதீமன்றம் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிலும், உயர்நீதிமன்ற தீர்ப்பையே உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
சட்ட சிக்கல் இருக்கா?
ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை சில சிக்கலை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றாமல் அரசாணை வெளியிட்டால் அது வேறு. ஆளுநரிடம் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ள நிலையில், அரசின் நடவடிக்கை முறையற்ற நடத்தையாக பார்க்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும், அரசாணையை எதிர்த்து யாரேனும் நீதிமன்றம் சென்றால், இது அரசுக்கு சிக்கலாக மாறலாம்.
ஆனால், அதற்குள் ஆளுநரை சந்தித்து தமிழக அரசு ஒப்புதல் பெற்றுவிட்டால் உள்ஒத்துக்கீடு சுமூகமாக அமல்படுத்தப்படும். ஆளுநரின் ஒப்புதல் இல்லாவிட்டாலும், உடனடியாக கலந்தாய்வை அறிவித்து மாணவர் சேர்க்கையை நிறைவு செய்தால், மாணவர்களுக்கு பயனாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.