ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பதும் ஒருவகை போதைதான். ஆன்லைன் சூதாட்டப்பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வந்தது. இதனால் பல குடும்பம் பாதிக்கப்பட்டது அதுமட்டுமின்றி இதில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். மது மட்டுமில்லை சூதும் ஒருவகை போதைதான். இதில் இப்போது ஜெயித்துவிடலாம், விட்டதை பிடித்துவிடலாம் என சொத்தை இழந்தவர்கள் ஏராளம்.
இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய கோட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
அதன்படி தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அதன்படி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. மீறி ரம்மி விளையாடும்பட்சத்தில் ரூ.5000 அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருக்கும்பட்சத்தில் ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
பணம் வைத்து விளையாடுபவர்களின் கணினி, சாதனங்கள் தடை செய்ய சட்டத்தில் வழிவகை இருக்கிறது. அதேபோல் ஆன்லைன் மூலமான பண பரிவர்த்தனையும் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.