தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்திர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பிஎஸ் தேனப்பன் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர்.
டி.ராஜேந்தர், முரளி இடையே கடும் போட்டி நிலவியது. திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க 2 கிராம் தங்க காசு, 32 இன்ச் எல்இடி டிவி, ரொக்கமாக பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த தேர்தலில் தேனப்பன் எந்த அணியும் இணையாமல் தனியாக போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் என 26 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் 1050 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையானது எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகின. இதில் முரளி 557 வாக்குகளும், டி.ராஜேந்திர் 337 வாக்குகளும், தேனப்பன் 87 வாக்குகளும் பெற்றனர். சுமார் 220 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ராஜேந்திரை விட அதிகமாக பெற்று தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார்.