பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான காய் நகர்த்தல்களை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால், இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலை அலங்கரிக்கும் தலைவர், முதலமைச்சராவதோடு மட்டுமல்லாமல், அடுத்த ஆளுமையாகவும் உருவெடுப்பார். இதன் காரணமாக, இந்த தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் தடம் பதித்த பாஜகவால், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. எனவே, இந்த தேர்தலிலாவது கணிசமாக வாக்குகளை பெற்று, நோட்டாவை தாண்டி, பல தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக பம்பரமாக செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலின்போது, பிரச்சார பீரங்கியாக பயன்படுத்த கட்சியில் நட்சத்திர பட்டாளத்தை இணைந்து வருகிறது. பாஜக கட்சியே ஒரு நடிகர் சங்கம் தான் என நெட்டிசன்கள் கிண்டலடிக்கும் அளவிற்கு அங்கு திரைத்துறை பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
Check out More for BJP News in Tamil
இதேபோன்று, பல யுக்திகளை வகுத்து, பாஜக செயல்பட்டு வருகிறது. அதில், மிக முக்கியமான ஒன்று வேல் யாத்திரை. வட மாநிலங்களில் பாஜக நடத்திய ராமர் ரத யாத்திரையும், அதனால் பாஜகவுக்கு கிடைத்த அரசியல் மைலேஜும் அனைவரும் அறிந்ததே. இதே பாணியில், தமிழ் கடவுளான முருகனுக்கு வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
தமிழநாட்டில் எல்லா பகுதிகளிலும், எல்லா சாதியினராலும் வழிபட கூடிய கடவுள் முருகன். தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் மக்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழ் கடவுள் முருகன் மீதான முக்கிய தோத்திரங்களில் ஒன்றான கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பும் வகையில், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கடந்த சில மாதங்களுக்கு முன், வீடியோ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாக பரப்பப்பட்டது. ஆனால், இதை மறுத்த திமுக, கருப்பர் கூட்டத்திற்கும், திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த யூடியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இந்த விவகாரத்தை பாஜக லேசில் விடுவதாக தெரியவில்லை. இதனிடையே, திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான விசிக, மனு தர்ம நூல் குறித்த சர்ச்சையில் சிக்கியது. இதையெல்லாம் வைத்து புதிய பிரச்சார வாய்ப்புகளை பாஜக உருவாக்கியுள்ளது.
இதன் அடிப்படையில், முருகனுக்கு நாளை முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்படும் என பாஜக அறிவித்தது. வட தமிழகத்தில் உள்ள திருத்தணியில் தொடங்கி , முருகனின் அறுபடை வீடுகள் வழியாக, தென்தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூரில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனாவை காரணம் காட்டி, இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில், இந்த யாத்திரை முடிவடைவதால், சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா 2, 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது, என்று தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தலாம் என மத்திய அரசு அனுமதியளித்தப் பின்னரும், மாநில அரசு இதற்கு அனுமதி தர மறுப்பது அவசியமில்லாதது. பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவெடுத்துள்ள நிலையில், வேல் யாத்திரைக்கு தடைவிதிப்பது சரியல்ல”, என கூறினார்.
இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம், வேல் யாத்திரை குறித்து தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து வழக்குகளை தொடரலாம் என தெரிவித்துள்ளது.