காலாவதியானவர்களின் கூடாரமாக தமிழக பாஜக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
மனு தர்மம் குறித்த விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சால் பாஜக – விசிக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ஒரே இடத்தில் இரு கட்சிகளும் எதிரெதிர் போராட்டங்களை நடத்தின. பாஜக தலைவர்கள் பலர் திருமாவளவனை நேரடியாக தாக்கி பேசினர்.
இந்தநிலையில், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டிலேயே 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரி விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே அதிகமாக கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மோடி அரசு இந்த ஆண்டே ஓபிசி மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுத்திருந்தால் பல ஓபிசி மாணவர்கள் பயன் அடைந்திருப்பார்கள்.
காலாவதியானவர்களின் கூடாரமாக தமிழக பாஜக உள்ளது. ஓய்வு பெற்ற ஐபிஎஸ், ஓய்வு பெற்ற நடிகை போன்றவர்கள்தான் பாஜகவில் உள்ளனர்.
பெரியாரின் சமூக நீதி என்ற தலைப்பில் என்னை பேச சொன்னார்கள். அப்போது மனு தர்ம நூல் குறித்து பேசினேன். அந்த நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் மனு தர்ம நூலை படித்தார், ஆத்திரமடைந்து அதனை தீயிட்டுக் கொளுத்தினார்.
நான் அம்பேத்கரின் பிள்ளை பெரியாரின் மாணவன். அம்பேத்கரை கொண்டாடும் கட்சிதான் பாஜக. அம்பேத்கர் ஏன் மனு தர்ம நூலை கொளுத்தினார் என்று பாஜக முதலில் அறிந்து கொள்ளட்டும். அம்பேத்கர் ஒரு இந்துவாக இருந்ததால் தான் மனு தர்ம நூலை எதிர்த்தார்.
கொச்சை படுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. கல்வியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசுவதாக கூறுகிறார்கள்” என்று, கூறினார்.