உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சண்ட்பா பகுதியை சேர்ந்த 19 வயது பெண் 4 இளைஞர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான பாதிப்பால் மருத்துவமனையில் 15 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதோடு இறுதி மரியாதைக்குக் கூட அவகாசம் வழங்காமல் போலீஸார் சடலத்தை எடுத்து நள்ளிரவில் தகனம் செய்தனர். தகனத்தின்போது உறவினர்கள் சிலர் மட்டுமே உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹாத்ரஸ் சம்பவத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்றிருந்தனர்.
அவர்களை உத்தரபிரதேச மாநிலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தடுத்துநிறுத்திய போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 188-வது பிரிவின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது எனவே ஊருக்குள் அனுமதிக்க முடியாது என கூறினர்.
இதையடுத்து போலீஸார் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி காவல்துறையினரை தகர்த்து ஊருக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது ஒரு காவல் அதிகாரி ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் நிலைதடுமாறிய ராகுல்காந்தி தவறி கீழே விழுந்தார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், ( DMK Political Leader ) உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரசில் பாலியல் வன்முறையால் உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு அந்த கழக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்ட பேரணியை, மெழுகுவத்தி ஏற்றிவைத்துத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
இதுகுறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை எனவும் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம் வகித்து வருவதாகவும் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது எனவும் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தைப் போலவே தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக. ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்து அதை செல்போனில், இண்டெர்நெட் போன்றவற்றில் போட்டு அசிங்கப்படுத்தி கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி, அவர்களை மிரட்டி பணம் பறித்திருக்கும் கொடுமைகளையெல்லாம் இந்தத் தமிழ்நாட்டில் பொள்ளாச்சிப் பகுதியில் நடந்ததை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ராகுல் காந்தி அவர்கள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்கு நன்குத் தெரியும். அதையும் தாண்டி, தொடர்ந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்; அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருப்பவர். அவருக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதோடு உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். என உறுதியோடு கூறினார்.