கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, கொரோனா மற்றும் வேறு சில பிரச்சனைகள் காரணமாக வெற்றிவேலின் உடல்நிலை மோசமடைந்தது.
இதனால், செயற்கை சுவாச கருவி பொருத்தி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1996ம் ஆண்டில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று வெற்றிவேல் கவுன்சிலரானார். சென்னை மாநகராட்சி கவுன்சிலில் எதிர்க்கட்சி தலைவராகவும், தமாகா குழுத் தலைவராகவும் வலம் வந்தார்.
2001ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் புரசைவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 3,800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவேல் தோல்வியுற்றார். மூப்பனார் மறைவுக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடன் இணைந்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெற்றிவேல் அதிமுக வசம் சென்றார்.
மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசனின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட அவர், ஜெயலலிதாவிடம் தன்னை சமர்ப்பித்து கொண்டார். 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றார்.
அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் ஶ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஜெயலலிதா இழந்திருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் தேர்தல் போட்டியிட ஏதுவாக தனது எம்.எல்.ஏ. பதவியை வெற்றிவேல் ராஜினாமா செய்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார். தொகுதியை தியாகம் செய்ததால் ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பிடித்த வெற்றிவேலுக்கு 2016ம் ஆண்டு பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
தேர்தலில் வெற்றி பெற்ற வெற்றிவேல் மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.வானார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக உடைந்த போது, சசிகலா அணியில் வெற்றிவேல் இணைந்தார். பதவிக்காவும், அதிகாரத்திற்காகவும் பலர் அணிகள், கட்சிகள் மாறியபோதும், சசிகலா, தினகரனின் நம்பிக்கைக்குரியவராக வெற்றிவேல் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.