அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தல் நெங்கி வரும் சூழலில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் பரவின. அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜய் கட்சியை பதிவு செய்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகின.
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் அந்தக் கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அகமது திட்டவட்டமாக மறுத்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார்.
இதனிடையே இது தொடர்பாக விளக்கம் அளித்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல” என்று கூறினார்.
இதை்தொடர்ந்து, நடிகர் விஜய் ஒரு சூடான மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “என் தந்தை ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன்”, என்று கூறியுள்ளார்.