கொரோனா காலத்தில் டீ விற்பனை தொழில் செய்து வரும் இளவரசன் தனக்கு வரும் வருமானத்தில் ஆதரவற்றோருக்கு மூன்று வேலையும் உணவு வழங்கி அசத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் சிறு வயதிலேயே தனது தாய் மற்றும் தந்தையை இழந்து அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவர். இவர் பி.எஸ்.சி.பட்டப்படிப்பைப் படித்து முடித்துள்ளார். இதன் பின்னர் வேலைக்காகச் சென்னை சென்றிருந்தபோது எங்கு தேடியும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இவர் செல்லும் இடமெல்லாம் சிபாரிசு உள்ளதா என்று கேட்டிருக்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்ற தெரியாமல் மணம் உடைந்து போன தமிழரசன் தங்க இடமில்லாத காரணத்தால் மெரினா கடற்கரை ஓர சாலையில் இரவு உறங்கி இருக்கிறார். காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அவரது உடைமைகளுடன் சேர்த்து சான்றிதழ்களும் திருடப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து செய்வதறியாத அவர், மதுரை சென்றிருக்கிறார். அங்கு சாலையோரம் படுத்து உறங்கி பிச்சை எடுத்து தனது வாழ்க்கையின் 7 மாதங்களை கடந்து வந்துள்ளார். அதன் பின்னர், மதுரையின் அலங்காநல்லூர் பகுதியிலும் இதே போன்று பிச்சை எடுத்து தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார் இளவரசன்.
இந்நிலையில் ஊரடங்கு அறிவித்த பின்னர் அவருக்கு டீ விற்பனை தொழில் தொடங்கலாம் என்ற யோசனை உருவானது. இதனையடுத்து தான், பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த பணத்தில் 5 ஆயிரம் ரூபாயை வீட்டு வாடகைக்கும் 2 ஆயிரம் ரூபாயை டீ தொழிலிற்கும் முதலீடு செய்தார். அதன் பின் அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை மாலை என இரண்டு வேலைகளும் சைக்கிளில் சென்று டீ விற்பனை செய்து வந்தார். ஒரு டீ 10 ரூபாய்க்கு விற்று வந்த அவர் இதிலும் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். ஒரு நாளைக்கு மூன்று வேலையும் தனது வீட்டிலேயே சுத்தமாக தயாரித்து 10 ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதை இன்றளவும் தவறாமல் பின்பற்றி வருகிறார் இளவரசன்.
இது குறித்து பேசிய அவர், தன்னை போன்ற அனாதை குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு காப்பகம் அமைத்து அவர்களை பார்த்துக் கொள்வது தான் தன் வாழ்நாள் லட்சியம் என்று கூறியிருக்கிறார்.