வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து 174 பயணிகள் உட்பட 191 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு கேரளா வந்தது. இந்த விமானம், மலப்புரம் மாவட்டம் கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவு 7:40 மணிக்கு தரையிறங்கியது. அப்போது, ஓடுபாதையில் இருந்து விலகி, பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாக பிளந்த விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 120க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 15 பேர் வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், பயணிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மீட்பு குழுவினர் தங்களை தாங்களே தனிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், விமான விபத்தில் இருந்து தப்பித்த பயணிகளின் துயர்மிகு அனுபவங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தனது 4 குழந்தைகளுடன் விமானத்தில் பயணித்த தாய் ஷாஹினா தனது நேரடி அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தாய் ஷாஹினா கூறியதாவது, “ஷார்ஜாவில் எனது கணவரை பார்த்துவிட்டு, 4 குழந்தைகளுடன் விமானத்தில் கேரளா திரும்பிக் கொண்டிருந்தேன். விமானம் தரையிறங்கத் தொடங்கும் வரை எல்லாம் இயல்பாகவே இருந்தது. கொரோனாவில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள முழு உடல் கவசம் அணிந்திருந்தோம். திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது.
அதிர்ச்சியிலிருந்து வெளியேறும் முன், நாங்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டோம். இருக்கைகள் தலைகீழாக திரும்பின. அழுகைகள், அலறல்களுக்கு இடையில், நான் என் குழந்தைகளை மட்டுமே தேடிக்கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் என் அருகில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இருக்கைகளின் கீழ் சென்றிருந்தார்கள். பின்னர் என்ன நடந்தது என்பதை நினைவுகூர முடியவில்லை”, என்று கூறினார்.