அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
*அதிபர் தேர்தல்*
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களம் காண்கிறார். அன்றைய தினத்திலேயே துணை அதிபரும் தேர்வு செய்யப்பட உள்ளார். குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் களமிறங்குகிறார். ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரில் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த தாய், ஜமைக்காவை சேர்ந்த தந்தைக்கு பிறந்த கமலா ஹாரிஸ், ஆசிய அமெரிக்கர்கள், கருப்பின மக்களின் வாக்குகளை அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
*இந்திய வம்சாவளி வாக்கு*
அமெரிக்காவில் சுமார் 12 லட்சம் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாக்காளர்கள் உள்ளார். இவர்களின் வாக்குகளை ஈர்க்க குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அண்மையில் பிரச்சார மேடையில் உச்சரித்த ‘சித்தி’ என்ற தமிழ் வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலானது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் மற்றும் இந்திய சமூகத்தை அவர் பக்கம் இழுத்தது.
*மோடியை இறக்கும் டிரம்ப்*
இந்தநிலையில், அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களின் வாக்குகளை கவரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ‘4 மோர் இயர்ஸ்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள வீடியோவில் ஹூஸ்டனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஹவுதி மோடி’ நிகழ்ச்சி, மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது.