உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 நோய்த் தொற்றால் இதுவரையில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் உயிரிழப்புகள் குறைந்த காணப்பட்டாலும் மற்ற நாடுகளில் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் முயன்று வருகிறது. இதுவரை 133 தடுப்பூசிகள் அமெரிக்க, பிரேசில், இங்கலாண்ட உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் 10 மட்டுமே விலங்குகள் சோதனைக்குப் பின்னர் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நிலையில் உள்ளன. இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு முழு வீச்சில் அனைத்து நாடுகளும் பணியாற்றி வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிப்பில் நெருங்கி உள்ள நாடுகள் அமெரிக்க, கனடா, இஸ்ரேல் உள்ளிட்டவை ஆகும். இந்த வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது முதல் உள்நாட்டு தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவேக்சின் எனப்படும் இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த தடுப்பு மருந்தை பரிசோதனை செய்ய இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐ.எம்.சி.ஆர் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைராலாஜி நிறுவனம் இணைந்து இந்த தடுப்பூசியை பரிசோதிக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மாதம் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் பரிசோதனைக்கு இந்த தடுப்பூசி உட்படுத்தப்பட உள்ளது. இதற்காக சென்னை, விசாகப்பட்டினம், டெல்லி, பாட்னா, நாக்பூர், ஹைதராபாத், கோவா உட்பட 12 இடங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு செய்துள்ளது.
சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரி தேர்வு செய்யப்பட்டிருப்பதால் அங்கு தடுப்பூசி பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்றால் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மக்கள் உபயோகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்து மத்திய அரசு முடிவெடுத்த பின்னரே இறுதியான தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதுவரையில் போலியோ, ரோடாவைரஸ் என பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருக்கும் இந்தியா, இதிலும் நிச்சயம் வெற்றி பெற்று அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் என எதிர்பார்க்கலாம்.