பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் மற்றும் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி இடையிலான வாட்ஸ்அப் சாட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
*தற்கொலையும் – மர்மங்களும்*
தோனி பட நாயகன் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் உயிரை மாய்த்துக் கொண்டார் என கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும், அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
*தந்தை புகார்*
இந்தநிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதில், சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பண மோசடி செய்ததாகவும் சுஷாந்தின் காதலி ரியா மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
*ரியா மீது சுஷாந்த் அதிருப்தி*
சுஷாந்தின் மறைவுக்கு முன்னதாக, கடந்த ஜூன் 8ம் தேதி சுஷாந்தின் வீட்டை விட்டு ரியா வெளியேறினார். காதலில் சுஷாந்திற்கு அதிருப்தி இருந்ததாகவும், இதனாலேயே ரியா வீட்டை விட்டு வெறியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தற்போது ரியா மற்றும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் இடையே கடந்த ஜூன் 8ம் தேதி நடைபெற்ற வாட்ஸ்அப் சாட் வெளியாகி வைரலாகி வருகிறது.
*ரியா – மகேஷ் பட்டின் வாட்ஸ்அப் சாட்*
இதில், ரியா, “ஆயிஷா நகர்கிறார் சார். ஒரு கனமான இதயத்துடனும் நிம்மதியுடனும். நமது கடைசி அழைப்பு விழித்தெழுந்த அழைப்பு. நீ என் தேவதை, நீ எனது தேவதையாக அப்போது இருந்தாய், எப்போதும் இருப்பாய்”, என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த மகேஷ் பட், “இனி திரும்பிப் பார்க்க வேண்டாம். உனது தந்தை மகிழ்ச்சியாக இருப்பார்”, என தெரிவித்துள்ளார்.
*ரியாவுக்கும் அதிருப்தி*
தொடர்ந்து பதில் அளித்த ரியா,”தொலைபேசியில் நீங்கள் என் அப்பாவைப் பற்றி சொன்னது எனக்கு கொஞ்சம் தைரியம் கொடுத்தது. உங்களை சந்தித்தது எனது அதிர்ஷ்டம். நீங்கள் என்னிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்னுள் எதிரொலிக்கிறது.” என்று கூறியுள்ளார். இந்த சாட்டின் மூலம் சுஷாந்தை போல, ரியாவும் இந்த காதல் உறவில் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.