தமிழகத்தின் இருபெரும் ஆளுமையான திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதில் தங்களின் பலத்தை நிரூபிக்க இரு கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிகழும் என்பதில் சந்தேகம் இல்லை.
இருபெரும் ஆளுமையின்றி நடக்கும் முதல் சட்டசபை தேர்தல்
திமுகவில் கருணாநிதி மறைவுக்கு பின் அவரது மகனான ஸ்டாலினுக்கு திமுக தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆளும் அதிமுக அரசில் முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் பதவி ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழங்கப்பட்டது. பின் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரிந்துரையில் முதலமைச்சர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளாக பிரிந்துகிடக்கும் கட்சி
அன்றுமுதல் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இருபிரிவாக பிரியத் தொடங்கியது. பின் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பதவியில் ஓ.பன்னீர்செல்வமும் அமர்ந்தனர். இருப்பினும் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணிகளுக்கு இடையே போஸ்டர் மோதல் அவ்வப்போது நடைபெற்றுதான் வருகிறது.
2021-ல் முதலமைச்சர் வேட்பாளர் யார்
சமீபகாலமாக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்ற வார்த்தை மழுங்கி வந்த நேரத்தில் தற்போது மீண்டும் இந்த வார்த்தை உதயமாகியுள்ளது. இதற்குகாரணம் வரவிருக்கும் சட்டசபை தேர்தல்தான். 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என சர்ச்சை தொடங்கியுள்ளது.
அமைச்சர்களிடையே மோதல்
இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இரு பெரும் தலைவர்களான இபிஎஸ்m ( EPS ), ஓபிஎஸ் தலைமையில் கட்சி நடைபெறும் அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டசபை உறுப்பினர்கள் கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழக முதல்வர் என ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் இல்லையா
எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கும் இந்த நேரத்தில் செல்லூர் ராஜூவின் இந்த பேச்சு பலரையும் வியப்படைய வைத்தது.
அமைச்சர் பொளேர் பதில்
இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதல்வராக பழனிச்சாமியும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி பெற்ற வெற்றியின் ஒற்றுமையை மக்கள் விரும்புகிறார்கள் எனவும் இதுவே தொடரும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினார்.
அமைச்சர் கூறியது அவர் கருத்துதான்., அதிமுக கருத்து இல்லை
அதேபோல் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், எடப்பாடி பழனிசாமிதான் என்றும் முதலமைச்சர் என அவரது தொனியில் வெளிப்படையாக தெரிவித்தார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமிதான் நிரந்தர முதல்வர் என ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது கருத்துதான். அது அதிமுக கருத்தல்ல என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்த தவறை செய்யும் அதிமுக
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக-வில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என வெளிப்படையாக அறிவித்த போதிலும், காங்கிரஸ் கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின், ராகுல்காந்திதான் காங்கிரஸ் கூட்டணி பிரதமர் வேட்பாளர் என வெளிப்படையாக அறிவித்தார். இது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பலரையும் வெறுப்படைய வைத்தது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
அதே தவறை 2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக செய்துவிடுமோ என அரசியல் விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். அதிமுக வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை முன்னிருத்தி பரப்புரையில் ஈடுபடுமா அல்லது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் செய்த அதே பிழையை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.