சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருக்கும் தில் பெச்சாரா திரைப்பட டிரெய்லர் திங்களன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது யூடியூபில் வெளியிடப்பட்ட 16 மணி நேரத்திற்குள் சுமார் 21 மில்லியன் பார்வையாளர்களை கொண்டிருந்தது.
மேலும் இந்த ட்ரெய்லருக்கு யூடியூப்பில் 24 மணி நேரத்தில் 4.3 மில்லியன் லைக்குகள் குவிந்தன. இது ஹாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களான அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார் மற்றும் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் ஆகிய இரண்டு டிரெய்லர்களை விட அதிகமானதாகும்.
அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் டிரெய்லர் யூடியூபில் 3.2 மில்லியன் லைக்குகளையும், எண்ட்கேம் யூடியூபில் 2.9 மில்லியன் லைக்குகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் படத்தின் ரீமேக் தான் தில் பெச்சாரா. இது அமெரிக்க எழுத்தாளர் ஜான் கிரீனின் ஆங்கில நாவலைத் தழுவிய கதை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இளம் வயதுடைய கதாநாயகி மற்றும் கதாநாயகன் புற்றுநோய் ஆதரவு குழுவில் சந்திப்பர். அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையே உண்டாகும் காதல் பற்றிய சுவாரஸ்யமான கதைக் கரு இது. இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி மற்றும் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளன. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அமிதாப் பச்சன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இத்திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொது முடக்கம் காரணமாக வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகரான சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவரின் இறுதிப் படமான தில் பெச்சாராவை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் திரையிடத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி இந்த மாதம் 24 ஆம் தேதி ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளது. அவரின் மறைவிற்குச் சமர்ப்பணம் அளிக்கும் விதமாக இத்திரைப்படத்தைக் கட்டணமின்றி அனைவரும் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.