பிரிட்டனில் 90 வயது மூதாட்டி முதல் நபராக பைஸர்-பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நிறுவனங்கள் போராடி வருகின்றன. கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் நாடு எப்போது இயல்பு நிலைக்கும் திரும்பும் என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருந்து வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் பைஸர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி 95% கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பைஸர்-பயோஎன்டெக் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. முதல்கட்டமாக பிரிட்டனில் 80 வயதை கடந்த முதியோர், முன்களப்பணியாளர்கள், மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், பிரிட்டனில் முதல் நபராக வடக்கு அயர்லாந்தில் உள்ள என்னிஸ்கிளன் எனும் நகரைச் சேர்ந்த மூதாட்டி மார்கரெட் கீனானுக்கு பைஸர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 91 வயதை எட்டவிருக்கும் அவர், கொரோனா தடுப்பூசி தனக்கு முன்கூட்டியே கிடைத்த பிறந்த நாள் பரிசு போல உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த தடுப்பூசியை எல்லோரும் போட்டுக் கொள்ள வேண்டும். 90 வயதில் என்னால் இதை போட்டுக் கொள்ள முடியும் என்றால், இது உங்களாலும் முடியும்,” என்று தெரிவித்தார்.