ஸ்விஸ் வங்கிகளில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்கள் அடங்கிய 2ம் கட்ட பட்டியலை ஸ்விட்சர்லாந்து மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் செயல்படும் வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் சேமிக்கும் பணம் தொடர்பான விவரங்களுக்கு அதிக அளவிலான பாதுகாப்பு அளிக்கின்றன. இதனால், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் தங்களது கருப்பு பணத்தை இங்கு சேமித்து வருகின்றனர்.
இந்த வங்கிகளில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பணத்தை இந்தியர்கள் பலரும் சேமித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் வகையில், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை தானியங்கி முறையில் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்கட்ட பட்டியலை ஸ்விட்சர்லாந்து, இந்தியாவிடம் ஒப்படைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 2வது கட்ட பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா உள்பட 86 நாடுகளை சேர்ந்த 31 லட்சம் கணக்கு விவரங்கள் உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த பெரும் புள்ளிகள் பலர் இடம்பெற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 3ம் கட்ட பட்டியல் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.