ஓர் உள்ளாட்சி தேர்தல் நாடு முழுவதும் அதீத கவனத்தை பெற்றது என்றால், அது அண்மையில் நடந்து முடிந்த தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்தான். இதற்கு முக்கிய காரணம் மத்தியில் ஆளும் பாஜக, ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக வகுத்த அதிரடி பிளான்களே.
சமீபத்தில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் கோட்டையான துபக்கா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியின் தொகுதியை இடைத்தேர்தலில் கைப்பற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கர்நாடகாவை தவிர தென் மாநிலங்களில் ஜொலிக்காத பாஜகவிற்கு, இது புது உத்வேகத்தை அளித்தது. தென் மாநிலங்களுக்குள் நுழைய, தெலங்கானாவை துருப்பு சீட்டாக பயன்படுத்த முடிவெடுத்தது.
இதன்படி, மாநகராட்சி தேர்தல் என்றும் பாராமல் முக்கிய தலைவர்களை களத்தில் இறக்கியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக நேரடியாக வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஐதராபாத் மாநகராட்சிக்கு கடந்த 1ம் தேதி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவிடப்பட்டுள்ள ஒரு வார்டை தவிர மீதமுள்ள 149 இடங்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
கடந்த முறை 99 வார்டுகளை கைப்பற்றிய தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, இம்முறை 55 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.ஒவைசி கட்சி கடந்த முறையை போல் இம்முறையும் 44 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல், காங்கிரஸும் 2 இடங்களை பெற்றுள்ளது. ஆனால், 4 வார்டுகளில் இருந்து 48 இடங்களாக, பாஜகவின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், அண்மை காலமாக தெலங்கானாவில் பாஜக வளர்ந்து வருவதற்கு அந்தக் கட்சியின் செல்வாக்கு மட்டும் காரணமில்லை என்று கூறப்படுகிறது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மெத்தனப்போக்குமே காரணமாக பார்க்கப்படுகிறது.
தலைநகர் ஐதராபாத்தில், அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. நகரம் ஸ்தம்பித்தது. அரசின் மீட்பு பணி விமர்சனத்திற்குள்ளானது. அப்போது, ஐதராபாத்தின் மேயராக இருந்தது மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
மேலும், கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், ஒவைசியும் அதிகாரப்பூர்வமற்ற கூட்டணியில் இருந்தனர். வெளிப்படையாக கூட்டணி அமைக்காவிட்டாலும், ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதனால், இரு கட்சிகள் மீதும் மக்களுக்கு அதிருப்தி நிலவியதாக சொல்லப்படுகிறது. இதை உணர்ந்த பாஜக, மாநகராட்சி தேர்தலுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, அதிக வார்டுகளை பெற்றுள்ளது. குறிப்பாக, ஐதராபாத்தில் கிடைத்துள்ள வெற்றி, தென் மாநிலங்களில் பாஜகவின் என்ட்ரியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.