பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
நாட்டின் 72வது குடியரசு தின விழா, வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க உள்ளதாக, அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பின் பேசிய பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப், “பிரிட்டனில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரிட்டன் பிரதமர் ஜான்சன் வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார் “, என்று தெரிவித்தார்..
பின்னர் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “குடியரசு தினத்திற்கான அழைப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தின் அடையாளமாகும்.” என்று கூறினார்.