குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய தனது ஊதியம் போதவில்லை என்பதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்ததையொட்டி பிரதமர் தெரசா மே கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இதையடுத்து, பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றார்.
இந்த சூழலில், குடும்ப நடத்த வருமானம் போதவில்லை என்பதால், போரிஸ் ஜான்சன், தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக பிரிட்டன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெயரை வெளியிட விரும்பாத ஆளும் கட்சி எம்.பி.க்கள் அளித்த தகவலின் பேரில் இந்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், அடுத்த 6 மாதங்களில் பிரெக்ஸிட் விவகாரத்திற்கு தீர்வு கண்டவுடன் போரிஸ் ஜான்சன் பதவி விலக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் தற்போது 1.50 லட்சம் பவுண்டுகள் ஊதியமாக பெற்று வருகிறார். இது அவரது முந்தைய ஊதியத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது.
பிரதமராவதற்கு முன்பு, போரிஸ் ஜான்சன் நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டுகளும், மாதத்துக்கு 2 மேடைப்பேச்சுகளுக்கு 1.60 லட்சம் பவுண்டுகளும் ஊதியமாக பெற்று வந்தார். இதனால், 6 குழந்தைகளுடைய போரிஸ் ஜான்சன், வருவாய் பற்றாக்குறை காரணமாக பதவி விலக திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.