அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு சீன அரசு வாழ்த்து தெரிவிக்காதது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்த்ல முற்றிலும் மாறுபட்ட ஒன்று. இந்தியாவை போல் இல்லாமல், அமெரிக்காவில் இன்னும் வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. இதுமட்டுமின்றி அந்நாட்டு அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை.
மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் வரும் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்ய உள்ளனர். அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதை ஊடகங்கள் அறிவித்துள்ளதே தவிர, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின் வரும் ஜனவரி 6ம் தேதிதான் அரசின் அறிவிப்பு வெளியாகும். இதனால், அதிபர் தேர்தலை பொறுத்தவரை பெரும்பாலான மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு ஊடகங்கள் வெளியிடும் முடிவுகளை அந்நாட்டு மக்கள் அங்கீகரித்து வருகின்றனர். ஆனால், இந்த மரபை பின்பற்றி தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரமின்றி குற்றம்சாட்டி வருகிறார்.
இந்தநிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், சீனா, ரஷ்யா, பிரேசில் போன்ற சில நாடுகள் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
டிரம்ப் ஆட்சியின் கீழ், அமெரிக்கா – சீனா இடையிலான உறவு மோசமான நிலையை எட்டியுள்ளது. இருப்பினும், டிரம்பின் தோல்விக்கு சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், “தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக ஜோ பைடன் அறிவித்துக்கொண்டதை கவனித்தோம். ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். நாங்கள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றுவோம்” என்று கூறினார்.