சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கும் வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தற்போதுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஆரம்பமாகி உள்ளது. இது முழுமையாக அனைவருக்கும் சென்றடைய வருடக் கணக்கில் ஆகலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அந்த நாட்டில் கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இதுவரை ஜெர்மனியில் 13 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெர்மனியில் நாடு தழுவிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த முறை ஊரடங்கு மிகக் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கானது இன்றுமுதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஊரடங்கில் மிக அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டுமே திறந்திருக்கப்படும் எனவும் பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் வர வேண்டும் எனவும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.