அமெரிக்காவில் எதிரொலித்த இந்திய விவசாயிகள் போராட்டம்: குவியும் ஆதரவுகள்!
இந்தியாவில் வேளான் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 13-வது நாளாக நடந்து வருகிறது. விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து புதிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாரத் பந்த் நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசிய காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுகள் தெரிவித்தன.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு அலுவலகங்களில் உள்ள சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதனால் சில அரசு பணியாளர்கள் பணிக்கு வரவில்லை.
விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஆதரவு தெரிவித்தார். இருப்பினும் அதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா தரப்பில் ஆதரவு எழத்தொடங்கியுள்ளது.
இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு டக்லாமால்பா, ஜோஸ் ஹார்டர், டி.ஜே.காக்ஸ். ஆன்டி லீவின் உள்ளிட்ட அமெரிக்க எம்பிக்கள் விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.