கமலா ஹாரிஸ் மட்டுமின்றி அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்புகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கும், சென்னைக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒபாமா காலத்து துணை அதிபர் ஜோ பைடனுக்கும் சென்னையுடன் இருக்கும் தொடர்புகள் ஆச்சரியமளிக்கிறது.
2013ம் ஆண்டில் இந்தியா வந்த அப்போதைய துணை அதிபர் ஜோ பைடன், தனக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு குறித்து பதிவு செய்தார். மும்பையைச் சேர்ந்த பைடன் தனக்கு கடந்த 1972ம் ஆண்டில் அனுப்பிய கடிதம் குறித்து பேசினார். அந்த கடிதத்தை தான் பின்தொடரவில்லை என்றும், சபையில் இருக்கும் மரபியலாளர்கள் யாரெனும் அந்த பைடனை கண்டுபிடித்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.
பின்னர், 2 ஆண்டுகளுக்கு பிறகு, 2015 ஆண்டு வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மீண்டும் இந்தியாவுடனான தொடர்பு பற்றி ஜோ பைடன் பேசினார். கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டனாக இருந்த அவரது பெரிய, பெரிய, பெரிய, பெரிய, பெரிய தாத்தா ஜார்ஜ் பைடன் குறித்து விரிவாகக் கூறினார். ஓய்வுக்குப் பிறகு ஜார்ஜ் பைடன் இந்தியாவில் குடியேறி, ஒரு இந்திய பெண்ணை மணந்தார் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இந்தியாவில் ஜார்ஜ் பைடன் குறித்த பதிவுகள் எதுவும் இல்லை. மாறாக, கிழக்கிந்திய கம்பெனியின் ஆயுத வணிகக் கப்பல்களின் கேப்டன்களாக இருந்த இரண்டு பைடன் சகோதரர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.
இதில், பல கப்பல்களில் கேப்டனாக இருந்த இளைய சகோதரரான வில்லியம் பைடன் 1843 ஆண்டு 51 வயதில் பக்கவாதம் காரணமாக உயிரிழந்தார். மூத்த சகோதரரான கிறிஸ்டோபர் பைடன் மெட்ராஸில் குடியேறினார்.அவர், லண்டனில் வசித்து வந்த ஹாரியர் ஃப்ரீத் என்ற பெண்ணை மணந்தார்.
பின்னர், 1858 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் பைடன் மெட்ராஸில் இறந்தார். அங்குள்ள கதீட்ரலில், அவருக்கு ஒரு நினைவுததகடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்டோபர் பைடனின் இந்திய மனைவியைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. அதேசமயம், ஜோ பைடன் சொல்லும் தனது மூதாதையராக, கிறிஸ்டோபர் பைடன் இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவுக்கு லாபமா, நஷ்டமா?
அமெரிக்காவில் ஒவ்வொரு அதிபர் தேர்தலுக்கு பிறகும், புதிய நிர்வாகத்தின் உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கை எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவும். குடியேற்றம், விசா, புதிய சக்தியாக உருவாகும் சீனா, உலக நாடுகளுடனான ஒப்பந்தம் போன்ற விவகாரங்களில் ஜோ பைடனின் அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தொடர்பாக இந்திய ஆட்சியாளர்கள் தற்போதிலிருந்து மன கணக்கு போட்டு வருகின்றனர்.
கொல்லைப்புறத்தில் இந்தியாவை, சீனா சீண்டி பார்த்து வரும் சூழலில், உலகின் 50% பொருளாதாரத்தை கொண்டுள்ள ஜனநாயக நாடுகள் அனைத்தும் இணைந்து சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும், குடியேற்ற விவகாரத்தில் இந்தியாவில் இருந்து குடியேற விரும்பும் 5 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நேர்மறையான கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், சிஏஏ, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற உள்நாட்டு விவகாரங்களில் டிரம்ப் அரசை போல், பைடன் நிர்வாகம் மௌனம் காக்காது என்பதே உண்மை. இது இருநாடுகளுக்கு இடையிலான உறவை கசப்பானதாக்கவும் வாய்ப்புள்ளது. பைடன் அரசிடம் நிலையான நட்புறவை எதிர்பார்க்கலாம். ஆனால், அது பிரதமர் நரேந்திர மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையில் தான் உள்ளது.