சீனாவைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொழில்நுட்ப சாதனங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் அண்மையில் அமெரிக்க மக்களின் தகவல்களை சீனாவிற்கு இந்த நிறுவனம் வழங்கி வருவதாக அமெரிக்கா ஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதித்திருந்தது.
கடந்த மாதம் இந்திய சீன எல்லையான கள்வான் பள்ளத்தாக்கில் இரு ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சீனாவின் டிக் டாக் உட்பட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நடப்பாண்டிற்கான தனது இந்திய வருவாய் இலக்கை 50 சதவீதம் குறைத்து, நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியாவில் சீனாவிற்கு எதிரான எதிர்ப்பு உணர்வு உருவாகியிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
முன்னதாக ஹூவாய் நிறுவனம் நடப்பாண்டில் வருவாய் இலக்கை சுமார் 700 முதல் 800 மில்லியன் டாலராக நிர்ணயித்திருந்தது ஆனால் தற்போது அதனை 350 முதல் 500 மில்லியன் டாலராக குறைத்திருக்கிறது.
ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உலகளாவிய சேவை மையத்தில் பணிபுரிபவர்களை தவிர்த்து ஹூவாய் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களில் 60 முதல் 70 சதவீதம் வரை குறைத்து நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நாளிதழில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கை குறித்து கேட்டதற்கு ஹூவாய் நிறுவனம் தரப்பில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தியாவும் சீனாவைத் தவிர்த்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துமாறு இரண்டு அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.