நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் மலையாளத்தில் பேசி அசத்தியுள்ளார்.
சென்னையில் பிறந்த, மலையாள குடும்பத்தைச் சேர்ந்வர் பிரியங்கா ராதாகிருஷ்ணன். இவர், சில ஆண்டுகள் சென்னையில் வளர்ந்து, சிங்கப்பூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்து, மேற்படிப்புக்காக நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மக்களுக்கு ஆதரவு அரணாக கள பணி ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்தில் 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் அமைச்சரவையில் பிரியங்கா அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். நியூசிலாந்தில் இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யாரும் அமைச்சராக பதவி வகித்ததில்லை என்ற சூழலில், அமைச்சரவையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார்.புதிய அமைச்சரவையில் இவர், பன்முக்துறை, சமூக மற்றும் தன்னார்வ துறை, இளைஞர் நலத்துறை ஆகியவற்றின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தனது தாய் மொழியான மலையாளத்தில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் அவர், “அனைத்து நண்பர்களுக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்.அனைவருக்கும் என்னுடைய நன்றி. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எனது தாய் மொழி மலையாளம் முதன்முறையாக தற்போதுதான் ஒலிக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்று மலையாளத்தில் பேசியுள்ளார்