கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஸ்பெயினில் இரண்டு மாத காலத்திற்கு மேல் பொது முடக்கம் அமலில் இருந்தது. கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை பன்மடங்கு கூடுவதைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பொது முடக்கம் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் சுற்றுலாவை மையமாக கொண்டுள்ள ஸ்பெயின் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தது.
இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அரஞ்சா கொன்சாலெஸ், “நாங்கள் மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகிறோம். இருப்பினும் ஜூலை மாதம் முதல் படிப்படியாக சர்வதேச சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிப்போம். தனிமைப்படுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர கடைப்பிடித்து செயல்படுவோம். என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த மாதம் தொடக்கத்திலிருந்து சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் சர்வதேச பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் ஸபெயின் வரும் வெளிநாட்டுப் பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவர் எனவும் கூறினார். ஸ்பெயின் நாட்டிற்கு ஆண்டுக்கு 80 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். ஆகையால் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிறுத்தி சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு இந்த மாதம் தொடக்கம் முதல் மீண்டும் அனுமதி அளிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருப்பதை தங்கள் அரசாங்கம் உறுதிப்படுத்தும் எனத் தெரிவித்த அவர் பயணிகளாலும் தங்கள் நாட்டிற்கு எத்தீங்கும் ஏற்படாதவாறு பாதுகாப்போம் என்றும் உறுதியளித்தார்.அதுமட்டுமின்றி உள்நாட்டுச் சுற்றுலா பயணங்களை மீண்டும் தொடங்க பிரதமர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். ஜூன் 8 ஆம் தேதி முதல் நாட்டில் கால்பந்து விளையாட்டுகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த திடீர் அறிவிப்பு
பொது முடக்கம் காரணத்தால் மக்கள் வேலை இழுந்து, நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். அரசாங்கத்தின் பொது முடக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 23 ஆம் தேதி மாட்ரிட் மற்றும் பார்சிலோனா சாலைகளில் பெரிய போராட்டம் வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்கள், பேருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாகத் தான் பிரதமர் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒன்று சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி. இது மட்டுமல்லாது, கோவிட் நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் குடிமக்களுக்கு வழங்க 3 பில்லியன் டாலர் நிவாரணத் திட்டத்தையும் அறிவித்தார்.
ஐரோப்பாயி கண்டத்தில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடு ஸ்பெயின் ஆகும். இதுவரை 3 லட்சம் பாதிப்புகள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.