தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன் தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கற்களையும், பாட்டில்களையும் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்தார். பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலைக் கண்டித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையில் நிலவும் பிரச்சனை குறித்து, கிளிநொச்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை அதிகாரியை தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்ததாக குறிப்பிட்டார். இலங்கை அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.