தடுப்பூசி ஆய்வகங்களில் இருந்து முக்கிய தகவல்களை சீன ஹேக்கர்கள் திருடி வருவதாக, ஸ்பெயின் நாடு குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இந்த பந்தயத்தில் முதலிடத்தை பிடிக்க சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசி பயன்பாட்டிற்கு அவசர ஒப்புதல் அளித்து வருகின்றன. ஆனால், இந்த தடுப்பூசிகள் கண்டுபிடிப்பில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவை குற்றம்சாட்டுகின்றனர்.
தடுப்பூசிகள் வழங்கப்படும் அவசர ஒப்புதல்கள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகிறது. ஆனால், மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், அந்த நாடுகளோ இதை கவுரவப் பிரச்சனையாக பார்க்கின்றன.
இந்தநிலையில் சீனா மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள் தடுப்பூசி தொடர்பான முக்கிய தகவல்களை திருடி வருவதாக ஸ்பெயின் நாடு குற்றம்சாட்டியுள்ளது. ஸ்பெயின் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள தடுப்பூசி ஆய்வகங்களில் இருந்து முக்கிய தகவல்கள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சில சமூக விரோதிகளும், பல்கலைக்கழகங்களும், அரசு நிறுவனங்களும் மேற்கொள்வதாக ஸ்பெயின் நாடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதனிடையே இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. பிற நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை திருடவில்லை என, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.