அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், உலகமே அங்கீகரித்துள்ள ஜோ பைடனின் வெற்றியை தற்போதைய அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார்.
அமெரிக்காவில் மக்கள், அதிபருக்கு நேரடியாக வாக்களிப்பதில்லை. ஒவ்வொரு மாகாணத்துக்கும் அந்த மாகாணத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப ஒதுக்கப்பட்டுள்ள மாகாணங்களின் பிரதிநிதிகளுக்கே (Electoral College) மக்கள் வாக்களிக்கின்றனர். அந்த மாகாணத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் கட்சி, அதன் பிரதிநிதிகள் குழுவை கைப்பற்றும்.
மாகாணங்களில் வெற்றி பெறும் 538 பிரதிநிதகளும் அதிபரை தேர்வு செய்கின்றனர். இதில், 270 பிரதிநிதிகள் வாக்குகள் பெற்றவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இந்தநிலையில், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் குழு தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில், 270 தேர்தல் வாக்குகளை பெற்று அதிபர் பதவியை கைப்பற்றுவதை ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.
அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின், வரும் ஜனவரி 6ம் தேதி, நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து, ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க இருக்கிறார்.