அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.
உலகின் மிக சக்திவாய்ந்த அமெரிக்க அதிபர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து நாடுகளும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இத்தேர்தல் குறித்து, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தான். இவர் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். பெண் ஒபாமா என ஆதரவாளர்களால் அழைக்கப்படும் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமைகளுக்குரியவர்.
துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே, பிரச்சாரத்தின்போது, அவர் பயன்படுத்திய சித்தி என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தநிலையில், தேர்தல் நாளான இன்று, கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமமான மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் விழா கோலம் பூண்டுள்ளது. துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள கமலா ஹாரிஸின் குலதெய்வக் கோயிலான தர்மசாஸ்தா கோயிலில் அவர் வெற்றி பெற வேண்டி கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, இந்திய உணவுகளில் தனக்குப் பிடித்த உணவு என கமலா ஹாரிஸ் கூறிய இட்லி, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், கிராமம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் வைத்து கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.